ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் .....



மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது.

வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.

மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர் மகிழ்ச்சி தோன்றும்.

தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.

அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.

மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியர்களை போற்றுவோம் .

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக